Friday 19 April 2024

மயன் மகள் - 1.11(சரித்திரத் தொடர்கதை)

 


சென்றது ............

நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன்அவனின் மனைவி இளமதிஅவளை  அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால்  தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற மலைவாசி போல சித்தன் என்ற  பெயருடன்  நாககடம் சென்றான்அறுவை மருத்துவத்தின் பின்னர் போடும் நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்க அவன் கறமன் கற்காட்டிற்குச் சென்ற நேரம்அவனின் காதலி  இளமதி நாககடத்து நாயகியாக சுக்கிராச்சாரியாருடன் மயில்பொறியில் நாககடத்து ஓவியபுரிக்கு வந்தாள். மருத்துவர் 'நத்தன் ஓவியபுரி போனானே' எனச்சொன்னதை வைத்து நத்தன் என்ற பெயரில் இருப்பவன் நத்தத்தன் என்பதை இளநகை புரிந்து கொண்டாள்.

இனி.....


எழுந்தது யாளி பறந்தது வாள்


மழை விளையாடுங் கழைவளர் அடுக்கத்து 

அணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்

கணஞ்சால் வேழம் கதழ்வுற்று ஆங்கு

எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை

                                      - கடியலூர் உருத்திரங் கண்ணனார் [பெரும்பாணாற்றுப்படை]


இளநகையின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர், ‘நத்தத்தன் யார்? மீளிக்கடம்பர் மகனா?’ என்றார்.


ஆம், நான் நினைப்பது சரியாக இருந்தால் நத்தன், நாகநாட்டு அரசின் மருத்துவத் தலைவர் மீளிக்கடம்பர் மகன் நத்தத்தனாக இருப்பார்என்றாள், இளநகை.


அதைக் கேட்ட மருத்துவர் இடி இடித்தது போல் சிரித்தார். தொடர்ந்துமீளிக்கடம்பர் மகனுக்கு எப்போது வலக்கண் பிதுங்கி, முதுகில் கூன் விழுந்தது?’ என்றார்?


அதுதானே!’ என்றாள் உரகவதியும்.


உரகவதியைப் பார்த்து, நீங்களுமா? அம்மா!’ என்ற இளநகை, ‘மீளிக்கடம்பர் மனைவி நாகவள்ளித் தாயார் தலைசிறந்த வண்ணமகள் அல்லவா? அவருக்கு தெரியாத ஒப்பனைகள் நாகநாட்டில் இருக்கிறதா? அவற்றை நத்தத்தன் நன்றாகவே கற்றுவைத்திருந்தார் என்பது இந்த நாடறிந்த விடயம். அவர் தனக்குத் தானே ஒப்பனை செய்திருக்க முடியாதா? என்ன?’ எனக் கேட்டவள்,  அவர்களின் பதிலுக்கு காத்திராது ஓடிச்சென்று, ஒற்றரையும் நகர் காவலரையும் அழைத்தாள்.


அவர்களில் நகர் காவற்றலைவனைப் பார்த்துமாளிகை வாசலில் ஓவன் கீறிவைத்திருக்கும் நத்தனின் ஓவத்தை பார்வை மண்டபத்தில் வையுங்கள். அந்த ஓவத்தில் இருப்பவன் ஓவியபுரி சென்றிருக்கிறான். எங்கிருந்தாலும் அவனை அழைத்து வாருங்கள்என கட்டளையிட்டு ஒற்றருடன் அனுப்பினாள்.


நத்தனின் ஓவத்தைப் பார்க்க சென்ற காவலனுக்கு, ஓவனின் செய்கை அதிர்ச்சியைக் கொடுத்தது. நத்தனின் ஓவத்தைப் பார்க்க காவலன் வருவதை அறியாத ஓவன், நத்தனின் ஓவத்தைப் பார்த்து அதைவிடப் பெரிதாக, இன்னொரு ஓவம் வரைந்து கொண்டு இருந்தான். 


எதற்காக இந்த ஓவத்தை நகல் எடுக்கிறீர்? அதுவும் இவ்வளவு பெரிதாய்!’ என்று ஓவனிடம் கேட்டான்.


ஓவனும் சற்றுத்தடுமாறி, ‘பார்ப்போரை மருளவைக்கும் அவனைப் போன்ற உருவத்தைக் காண முடியாதேஎன்றான். ஓவனின் தடுமாற்றத்தை கண்டும் காணாதவனாகசரி சரி, உமக்கும் வேலை வேண்டும் தானே. நன்றாகக் கீறும். இந்த ஓவத்தைப் பார்வை மண்டபத்துக்கு அனுப்பும் என்றான்.


அதைக் கேட்டதுமே ஓவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘பார்வை மண்டபத்துக்கா? அவன் என்ன அடாத வேலை செய்தான்?’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, நத்தனின் ஒவம் வரைந்த துகிலை பணியாளிடம் கொடுத்து அனுப்பினான்.


காவலனும் பணியாளும் அவ்விடத்தை விட்டு அகன்றதும், தன் மனத்திரையில் இருக்கும் நத்தனின் அந்தக் கோரமுகத்தை விட்ட இடத்தில் இருந்து கீறத்தொடங்கினான். 


சித்தனும் இளநகையும் சிற்றாற்றங்கரைக்கு நுதிமயிர்த்துகில் வாங்கப் போன நேரம் நத்தன்,  மருத்துவரிடம்  சித்தன் எங்கே போயிருப்பான் என்பதை அறிய, நுதிமயிர்துகில் குப்பாயம்  தைக்கும் இடம்பற்றிக் கேட்டு அறிந்து கொண்டான். சுக்கிராச்சாரியாரும் நாககடத்து நாயகியுயும் வருகிறார்கள் என்ற செய்தியும் அங்கு வந்து சேர்ந்தது. 


புற்றீசல் போல் மனைகளில் இருந்து மக்கள் வெளியே வந்து தோரணங்களும் கொடிகளும் கட்டி நாககடத்தையே சில மணித்துளிகளில்  மாயாபுரியாக மாற்றிக்கொண்டிருந்தார்கள். 


அதைப் பார்த்த மருத்துவர்தன் வீடு ஓவியபுரியில் இருக்கின்றது என்றும் அங்கிருந்துமயில்பொறி வந்து இறங்கும் அழகைப்பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்என்றும் சொன்னார்.


அதைக் கேட்ட நத்தன், ‘ஐயா! நானு மயிலு பொறி பாத்ததில்லங்க. சித்த போயி பாக்கலாமுங்கஎன்றான். 


நத்தனுடன் பேசியபடி, தனது மருந்துப் பெட்டகத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்த மருத்துவர், ‘நீ ஓவியபுரி போய் மயில்பொறியைப் பார். வரும் போது எனது வீட்டிற்குச் சென்று அறுவை மருத்துவ வெள்ளூசிக்கு கோர்க்கும் ஒதிய நார் வாங்கிவா. என்னுடைய தாமனையில் போ. தாமனை ஓட்டி அங்கே நிற்பான்என்றார்.


தாமனையா? அது என்னதுங்க?’ என்றான் நத்தன் தெரியாதது போல.


யானை இழுத்துச் செல்லும் சின்னஞ் சிறிய வீடுதான் தாமனை. சிற்றாற்றங்கரைக்குப் போயிருக்கும் இளநகையும் சித்தனும் வரமுன் வந்து சேர்என்றவர், மருத்துவரின் முத்திரை பதித்த காணம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார். இதை நீ காட்டினால் தான் தாமனை ஓட்டியும், என் மனையாட்டியும் நீ சொல்வதை நம்புவார்கள்என்று சிரித்தார்.


நத்தனும் அவரோடு சேர்ந்து சிரித்தபடி, காணத்தை வாங்கிக் கொண்டு மெல்ல மாளிகையின் வாயிலுக்கு வந்தான். அறிமுகமில்லாது புதிதாக வருபவர்களை வரைவதற்கென்று அரண்மனைகளிலும்,  பெரிய மாளிகைகளிலும் ஓவியர்கள் இருப்பது அவனுக்குத் தெரியும். தன்னையும் வரைந்திருப்பர் என ஓவனைத் தேடினான்.  மாளிகை வாயிலில் இருந்த ஓவன், அவனைக் கண்டதும் அவனது ஓவத்தை எடுத்து திருத்துவதைக் கண்டு, ஓவனிடம் சென்றுசாமி! என்னையா சாமி கீறுற, நீ! நல்லாயிரு சாமி! நம்மளையல்லா யாரு கீறுறா? உதுல எனக்கு ஒரு நகலு குடு சாமி. நானு என் பொண்டாட்டியிட்ட கொடுக்க சாமி. இது புலிப்பல்லு சாமி. இதப்புடி சாமி. நானு இந்தாண்ட மருத்துவர் மனையடிக்கு போட்டு வாரன் சாமி!’ எனக் கூறி ஒரு புலிப்பல்லை ஓவன் கையில் திணித்துச் சென்றான். 


அந்தப் புலிப்பல்லுக்காக நத்தனை ஓவன் கீறிக்கொண்டிருந்தான்.


நத்தனோ, தாமனை ஓட்டியிடம் மருத்துவர் கொடுத்த காணத்தைக் காட்டி, கறமன் கடறில் நுதிமயிர் துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்கு போகச் சொன்னான். 


தாமனையில் கறமன் கடறுவரையும் போகலாம், கடறுப் பகுதிக்குள் போகமுடியாதே,’ எனத் தாமனை ஓட்டி, சொன்னான்.


சரி, மிகவிரைவாக கறமன் கடறுக்குப் போ, அங்கே போய்ப் பார்க்கலாம்என்றான் நத்தன்.


தாமனை கறமன் கடறு நோக்கிச் சென்றது.


முகிலனின் உடல்நிலை இப்போது கொஞ்சம் நன்றாகி இருப்பது நத்தனை மகிழ்ச்சியடைய வைத்தாலும், நாகநாட்டின் இளவரசனான மயனை ஒரு மலைவாசி போல் தனியே போகவிட்ட தன் செயலை நினைத்து வருந்தினான். 


நாகநாட்டில் இருந்து உலகநாடுகள் சுற்றிவரப் புறப்பட்ட போது அவனையும் முகிலனையும் அழைத்து விசுவகர்மாவும், மகாமந்திரியும், முகிலனின் தந்தை குமணரும், அவனின் தந்தை மீளிக்கடம்பரும் சேர்ந்து சொன்னவற்றை நினைத்துப் பார்த்து பெருமூச்சுவிட்டான்.


நம் பெற்றோர் நம்மைவிட அநுபவசாலிகள். அதனால் முன்னரே எச்சரித்தார்களா! அவர்கள் சொன்னபடி செய்வதா? அல்லது மயனின் எண்ணம் போல் நடப்பதா? சிந்தித்தான்.


தனக்கு என்ன நடந்தாலும் இரண்டு வருடத்தின் பின்னரே, மதங்கபுரி திரும்பி என் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பேன்என மயன் அடக்கடி சொல்லுவான். ஆனால் பெற்றோரோ உங்கள் மூவரது ஆற்றலும் சேவையும் நாகநாட்டிற்குத் தேவை. உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால் நாகநாட்டின் ஆபத்துதவிகளின் உதவியைப் பெறலாம். ஆபத்துதவிகள் தமக்குத்  தெரிவிப்பார்கள் என்றனர். இப்போ என்ன செய்வது? .......?  


நத்தத்தா! மயனைக் கண்ணை இமை காப்பது போல் காப்பது உன் பொறுப்புஎன அவனது தாய் நாகவள்ளி கூறியதையும் நினைத்தான். அவளுக்கு தன் அண்ணன் மகன் என்று, மயன் மேல் எவ்வளவு கொள்ளை ஆசை. அவளுக்குத் தெரிந்த கலைகளை எல்லாம் அவனுக்குக் கற்பித்தாளே. அவளின் தாயன்பின் செறிமாணமே அவளைநாகவள்ளித்தாயார்என்று உலகம் போற்றும் நிலைக்கு உயர்த்தியது. தாயை நினைத்ததும் நத்தனின் கண்கள் கலங்கின. தாயின் நினைவோடு களைப்பும் சேரக் கண் அயர்ந்தான்.


தாமனை ஓட்டியின்பிடாரன்!’ என்ற குரல் கேட்டுக் கண் விழித்தான். அவன் கண்ணெதிரே விண் உயர்ந்து ஓங்கி கறமன் கடறு நின்றது. கடறுப் பகுதிக்குள் யாரும் அரணம் இல்லாது நடந்து செல்ல முடியாது. அதிலும் இந்தக் கடறு பகுதிக்குள் நடந்து திரிவதற்கு அதற்கெனெத் தைக்கப்பட்ட அடி புதை அரணம் வேண்டும். கடறுக் கற்களில் ஏறுவதற்கு ஏற்றவாறு அரணத்தின் அடியைச் செய்திருப்பார்கள். அதற்கு எங்கே போவது என சிந்தித்தான். 


மீண்டும் தாமனை ஓட்டி, பிடாரன்! என நத்தனைக் கூப்பிட்டான்.


தன்னையே அவன் பிடாரன் எனக் கூப்பிடுகிறான் என்பதை உணர்ந்தான். தான் இப்போது மலைவாசி போல் இருப்பதால் அவன் தன்னை மலைக்குறவனாக நினைக்கிறான். அவன் கூப்பிடுவதிலும் தவறில்லையே. மருத்துவனையும் பிடாரன் என்று சொல்வார்கள், ஆதலால் பிடாரன் என்ற பெயர் எவ்வளவு அற்புதமாக எனக்குப் பொருந்துகிறது என எண்ணிச் சிரித்தபடிஎன்ன?’ என்றான். 


பிடாரா! உனக்கு புரவி ஏற வருமா?’ எனக் கேட்டான்.


காட்டுப் புரவியின்னா ஏறிப் பழக்கமுங்க. ஏனுங்க?’


நத்தனைப் பார்த்துகாட்டுப்புரவி ஏறும் உனக்கு, நாட்டுப் புரவி ஏறிப் போவது கடினமா? கடறுக்குள் போவதானால் புரவியில் சென்றால் மட்டுமே நுதிமயிர்துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்கு விரைவாகப் போகமுடியும். அதோ! கரிய புரவியின் உருவம் வரைந்த வெள்ளைக் கொடி காற்றில் அசைந்தாடுகிறதே அந்த இடத்தில் புரவி கிடைக்கும். அங்கு புரவியைப் பெற்று விரைவாகச் சென்று வா. நான் யானைகளுக்குத் தீனி போட்டு இளைப்பாற விடுகிறேன்என்றான் தாமனை ஓட்டி.


நத்தன், புரவிப்பந்திக்கு போய் கரியநிறப்புரவி ஒன்றையும் தனது தற்காப்புக்கு வேண்டிய மெல்லிய கீற்று வாள் ஒன்றையும் கூலிக்கு எடுத்தான். நாககடத்து மருத்துவர் கண்ணாகனாரை மனதிற்குள் பாராட்டினான். ஏனெனில் அவர் கொடுத்த முத்திரைக் காணமே எதுவித ஐயப்பாடும் இன்றி அவனுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தது.


நத்தன் புரவியில் ஏறி அமர்ந்தான். அந்தப்புரவியும் மிக ஒய்யாரமாக கறமன் கடறுக்குள் விரைந்தது. 


சிற்றாற்றங்கரையில் சித்தனின் சீழ்க்கை கேட்டு ஓடிவந்து, அவனைத் தன் மஞ்சு மேல் வைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்ற வாலகன், தேனாற்றங்கரை வரையும் சித்தனின் சொற்படி நடந்தது. தேனாற்றை நீந்திக் கடந்து, கறமன் கடறுக்குள் வந்ததும் அவனின் சொற்படி சிறிது தூரம் போகும், பின்னர் அதன் விருப்பப் படி வேறுவழியில் ஓடும். இப்படி மாறி மாறி வாலகனும் சித்தனும் நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கும் இடத்துக்குப் போவதற்கு இழுபறிப்பட்டனர். 


வாலகனைப் பற்றி இளமதி அவனுக்கு கூறியவற்றிற்கு முரணாக வாலகன் நடந்தது. ‘வாலகன் ஏன் இப்படி தன் எண்ணம் போல் நடக்கிறது. மனிதரைவிட மிருகங்களுக்கு ஆபத்துகளை அறியும் உணர்வு கூடுதல் அல்லவா! நான் சொல்லும் வழியில் சென்றால் ஆபத்தில் சிக்கிக் கொள்வோமோ? அதனால் தன்னை வேறு எங்கோ அழைத்துச் செல்லப் பார்க்கிறதோ?’ என எண்ணினான்.   


அந்த இழுபறியினால் வாலகன் போன வழியும் இல்லாமல் அவன் போக நினைத்த வழியும் இல்லாமல் இடையே சென்ற வாலகன் கடறு மலையுச்சிக்கு வந்தது. துதிக்கையைத் தூக்கி அங்கும் இங்கும் மோப்பம் பிடித்தது. உடலை மெல்லச் சிலிர்த்தது. இடது முன்னங்காலால் ஓர் உதை உதைத்து, பக்கத்தே இருந்த கடறுக் கல்லை துதிக்கையால் பற்றி இழுத்தது.


வாலகன் உடலைச் சிலிர்த்ததோ இல்லையோசித்தா!!!’ என்ற பேரலறலை மயன் கேட்டான். அந்தப் பேரலறல் ஒலி, வானுற ஓங்கி நின்ற கடறு முழுதும் பட்டுப்பட்டு, சித்தா! சித்தா! என மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. 


அலறல் வந்த திசையில் மயன் பார்த்தான். மயனின் பார்த்த விழி பார்த்தபடியே இருக்க, விழி எதிரே எழுந்தது யாளி. மின்னல் கீற்றெனப் பறந்தது வாள். விழுந்தது துதிக்கை. முழங்கியது யாளி. பிளிறியது வாலகன்.  


பெருங்கல் எந்திரங்கள் மிளிரும்...


இனிதே,

தமிழரசி.


சொல், சொற்றொடர் விளக்கம்:

மழை விளையாடுங் கழைவளர் அடுக்கத்து 

அணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்

கணஞ்சால் வேழம் கதழ்வுற்று ஆங்கு

எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை- மழைமேகம் தவழ்ந்து விளையாடும் மூங்கில் வளரும் பக்க மலையில் அச்சம் தரும் யானை முகமும் சிங்க உடலும் கொண்ட யாளி தாக்குவதால் பல யானைக்கள் கூட்டமாகச் சேர்ந்து கலங்கி கதறுவது போல கரும்பாலை எந்திரம் ஒலி எழுப்பி தொடர்ந்து ஆரவாரம் செய்யும்.

மழை - மழை மேகம்

கழை வளர் - மூங்கில் வளர்கின்ற 

அடுக்கத்து - பக்க மலையில்

அணங்குடை - அச்சம் தரும்/ வருத்தும்

யாளி - யானை முகமும் சிங்க உடலும் கொண்ட மிருகம்

பலவுடன் - பலவும்

கணஞ்சால் - கூட்டமாகச் சேர்ந்த

வேழம் - யானை

கதழ்வுற்று - கலங்கிக் கூப்பிட்டாற்

ஆங்கு - போல 

எந்திரம் - கரும்பாலை எந்திரம் [machine]

சிலைக்கும் - முழக்கம் செய்யும்/ ஒலிக்கும்

துஞ்சாக் - நில்லா/தொடர்ந்த 

கம்பலை - ஆரவாரம் 

வண்ணமகள் - ஒப்பனை செய்பவள் 

ஓவன் - படம் வரைவோன்

ஓவம் - படம்

துகில் - துணி

பார்வை மண்டபத்துக்கு - காட்சிச்சாலை

நகல் - பிரதி/படி

ஒதிய நார் - ஒதியமரத்தின் நார்

முத்திரை - அடையாளம்

காணம் - பொற்காசு

மனையாட்டியும் - மனைவியும்

மனையடி - வீட்டடி

செறிமாணம் - நிறைந்த பெருமை

விண் உயர்ந்து ஓங்கிய கடறு [பதிற்றுப்பத்து: 30]

அரணம் - செருப்பு 

அடிபுதை அரணம் - கால் முழுவதும் மூடப்படும் Boots [ பெரும்பாணாற்றுப்படை: 69]

பிடாரன் - குறவன்/ மருத்துவன்

புரவி - குதிரை

பேரலறல் - பயந்து எழுப்பும் மிகப்பெரிய ஒலி