Tuesday 3 September 2013

குறள் அமுது - (75)


குறள்:
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று                                   - 718

பொருள்:
ஒருவர் சொல்வது என்ன என்பதை தாமே உணர்ந்து கொள்பவர் முன் பேசுவது, தானாக வளரும் பயிருள்ள பாத்தியில் நீரை ஊற்றுவதைப் போன்றது. 

விளக்கம்:
ஒருவர் ஒன்றைப் பேசும் பொழுது அவர் என்ன பேசுகிறார் என்பதை அவையோர் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சொல்வதை உணரும் ஆற்றல் எல்லோருக்கும் சமமாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு சினிமாவில், வேறு சிலருக்கு விஞ்ஞானத்தில், சிலருக்கு மெஞ்ஞானத்தில், அரசியலில், கலைகளில் என விருப்பங்கள் இருக்கும். எமக்கு விருப்பமான பொருள்பற்றி ஒருவர் பேசினால் மிக ஆர்வத்தோடு அதனை நாம் கேட்போம். மற்றவற்றைப் புறக்கணிப்போம். இது தனிமனித இயல்பு. 

ஆனால் நல்ல ஆற்றல் உள்ளவர்கள் எதனையும் எப்போதும் மிக நுணுக்கமாகச் செவிமடுப்பர். அத்தகையோர் வீற்றிருக்கும் அவையில் பேசுவதால் வரும் பயனை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். ஒன்றின் பொருளை அதிகம் விரித்துக் கூறாமல் மிகச்சுருக்கமாகச் சொன்னாலும் அதன் கருத்தை உணர்ந்து கொள்ளும் அறிவாற்றல் மிக்கவர்களின் முன் பேசுவது, எவரும் விதைக்காது, தானாக வளர்ந்து பயிராக நிற்கும் பாத்தியுள் நீரை ஊற்றுவது போன்றது. 

ஒருவரும் நிலத்தை உழுது விதையை விதைக்காத போதும், தானாக முளைத்து வளர்ந்திருக்கும் பயிருக்கு நீரையூற்ற அது மேலும் செழித்து வளரும். அதுபோல், ஒன்றை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளோரின் அறிவும் தானாகப் பெருகி இருப்பதால், மற்றவர் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்வர். அத்தகையோர் இருக்கும் அவையில் பேசுபவர்க்கு, அவையை உணர்ந்து பேசும் ஆற்றலை அது கொடுக்கிறது. பிறர் சொல்வதை உணரும் ஆற்றல் உடையோருக்கு ஒன்றை எடுத்துச் சொல்வது மிகஎளிது என இக்குறள் கூறுகிறது. 

No comments:

Post a Comment